«
»
TwitterFacebookGoogle+

தமிழக தேர்தல் 2016: மக்கள் மனசு….

மோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  2016 பேரவைத் தேர்தல் இதுவரை இல்லாத வகையில் இரு திராவிட கட்சிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

நெருக்கடிக்கு காரணம், முன்னெப்போதும் காணாத விதமாக 3வது அணி என்ற கோஷம் வலுத்திருப்பது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3வது அணியாக இங்கு களமிறங்கிய பிஜேபி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றது.  பேரவைத்  தேர்தலிலும் பிஜேபி தலைமையில் கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

BANGALORE – 23/04/2009 : Young girls who have voted for the first time showing her finger marked with indelible ink after casting her votes at J P Nagar, during the Phases II polls, in Bangalore on April 23, 2009. Photo: K Murali Kumar.

கருணாநிதிக்கு வயது 92.  அவர் தலைமையில் திமுக சந்திக்கும் கடைசித் தேர்தலாக இது இருக் கலாம் என்று அவரே கூறிவருகிறார்.

இரும்புப் பெண்மணி என கட்சியினரால் போற்றப்படும் ஜெயலலிதா உடலளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதும் அவரே ஒப்புக்கொண்டுள்ள உண்மை. இச்சூழலில், திமுக, அதிமுக நேருக்கு நேராக களமிறங்கிய சந்தர்ப்பங்களில் விளைவுகள் எவ்வாறு இருந்தன என்பதை திரும்பிப்பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

1977ம் ஆண்டு தேர்தல் திமுக வரலாற்றில்  திருப்புமுனை. எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல்.

நெருக்கடி நிலைக்குப் பிந்தைய முதல் தேர்தலும்கூட.  கருணாநிதியின் தலைமைக்கு போட்டியாக வருவார் என கருதப்பட்ட மதியழ கன் நிதியமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

மற்றொரு முக்கிய தலைவர் சத்தியவாணிமுத்து, தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று விலகினார்.

நெடுஞ்செழியனும் விலகி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி னார். ஆனால் எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா திமுகதான் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கியது. 1972ல் தொடங்கப்பட்ட அதிமுக வின் வளர்ச்சியை அளவிடும் தேர்தலும் அது.

திமுகவும் ஜனதா கட்சியும் ஒரு கூட்டணி.  அதிமுகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரு கூட்டணி.   காங்கிரசும் இ. கம்யூனிஸ்டும் ஒரு கூட்டணி.  மும்முனைப்  போட்டியான தேர்தலில், திமுக 25 சதவீத வாக்கு பெற்று, 48 இடங்களை  வென்றது.

அதிமுக 30 சதவீத வாக்குகளையே பெற்ற போதிலும், 200 இடங்களில் போட்டியிட்டு 130 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியையும் பிடித்தது.

mgr-223x300அடுத்து 1980ம் ஆண்டு நடந்த தேர்தல் அதிமுகவுக்கு மீண்டும் வெற்றிவாகை சூடியது. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எம்ஜிஆர் ஆதரவு அளித்தாலும், அந்த தேர்தலின் முடிவில் ஜனதா ஆட்சி அமைந்ததும்  அதற்கு வெளிப்படையாக ஆதரவளித்தார்.

தமிழகத்தில் தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திராகாந்தி நின்றால் ஜெயிக்கவைப்பதாக வாக்களித்திருந்த எம்ஜிஆர், அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் நிர்ப்பந்தம் காரணமாக அதிலிருந்து பின்வாங்கி, அதனால் காங்கிரஸ் ஆட்சி செய்த கர்நாடகாவின் சிக்மகளூர் தொகு தியில்  இந்திரா போட்டியிட நேர்ந்தது அப்போ துதான்.

தஞ்சை வாக்குறுதியை நிறைவேற்ற இய லாமல் போனதற்கு பரிகாரமாக சிக்மகளூரில் நாஞ்சில் மனோகரன் தலைமையில் அமைச்சர்கள் குழுவை அனுப்பி அங்குள்ள மலையக தமிழர் வாக்குகளை சேகரித்து இந்திராவின் வெற்றிக்கு உதவினார் எம்ஜிஆர்.

ஆனால் ஜனதா அரசு கவிழ்ந்ததும் எம்ஜிஆரை முந்திக்கொண்டு காங் கிரஸ் பக்கம் சாய்ந்தது திமுக. 1980 நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரசோடு திமுக கூட்டணி அமைத்தது.

எம்ஜிஆர் வேறு வழியின்றி ஜனதா கட்சியோடு சேர்ந்தார். அந்த தேர்தலில் ஜனதா -& அதிமுக கூட்டணி வெறும் 2 இடங்களையே பிடித்தது. காங்கிரஸ், – திமுக கூட்டணி மீதமுள்ள 37 தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது.

உடனே பேரவைக்கும் தேர்தல் நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என கருணாநிதி சொன்னதை நம்பி எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திரா.

தேர்தல் அறிவிக்கப் பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் களம் இறங்கினர். காங்கிரஸ்,- திமுக ஒரு அணி யாக நம்பிக்கையுடன் களம் கண்டன.

ஆனால் நாடாளுமன்றம் வேறு, சட்டமன்றம் வேறு என்று தெளிவாக பிரித்துப் பார்த்த தமிழக மக்கள் திமுகவை அடியோடு புறக்கணித்தனர்.

அதி முக 39 சதவீத வாக்குகளைப் பெற்று 129 இடங் களுடன் ஆட்சியை தக்கவைத்தது. திமுக 30 சத  வாக்குகளைப் பெற்று 37 சீட் மட்டுமே பிடித்தது.

அடுத்து வந்த 1984 தேர்தல் இந்திரா காந்தி  மறைவால்  முக்கியத்துவம் பெற்றது. இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டாக வேலைபார்த்த ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அதிமுகவுக்கு பின்னடைவாக எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவர் பிரசாரம் செய்யாமல் அதிமுக வின் கதி என்ன என்று திகைத்திருந்த நேரத்தில் 38 சதவீத வாக்குகளைப் பெற்று அதிமுக 132 இடங்களில் வெற்றிபெற்றது.

வெற்றியின் பின்புலத்தில், எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றன.

தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஆர்.எம்.வீரப் பன், பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆர் மருத்துவ மனையில் இருக்கும் காட்சிகளையும், இந்திரா  உடல் தகன காட்சிகளையும் இணைத்து ஒளி பரப்ப ஏற்பாடு செய்தார்.

திமுக 30 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 24 சீட்தான் கிடைத்தது.

எம்ஜிஆர் 1987ல் காலமானார். ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். நான்தான் எம்ஜி ஆரின் வாரிசு; என்னுடையதுதான் உண்மை யான அதிமுக என்று களமிறங்கினார் ஜெய லலிதா.

இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. 132 எம்எல்ஏக்களை கொண்டிருந்த அதிமுக இரண்டாக உடைந்து,

ஜானகி பின்னால் 97 எம்எல்ஏக்களும், ஜெயலலிதா பின்னால் 33 எம்எல்ஏக்களும் அணிவகுத்தனர்.

பேரவையில் ஜானகி நம்பிக்கை வாக்கு கோரி னார். ஜெயலலிதா அந்த வாக்கெடுப்பைப் புறக் கணித்தார். எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன.

பேரவையில் மொத்தம் 111 எம்எல்ஏக்களில் 99 பேர் ஜானகி அரசுக்கு வாக்களித்து, அதன் மூலமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற் றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நியாயமான முறையில் நடக்காத வாக்கெடுப்பை மத்திய அரசு ஏற்கவில்லை. ஜானகி அரசை கலைத்தார் ராஜீவ். அடுத்து வந்த தேர்தலில் ஜானகிக்கு இரட்டைப் புறா சின்னம், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம் கிடைத்தன.

சேவல் 22 சதவீத வாக்குகளைப் பெற்று 27 தொகுதிகளை கைப்பற்றியது. சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியோடு கூட்டணி வைத்த ஜானகி அணி, 9 சதவீத வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் மட்டுமே வென்றது.

ஓட்டுச் சீட்டில் இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில், திமுக 33 சதவீத வாக்குகளைப் பெற்று, 150 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாக காரணம் கூறி 1991 ஜன வரி 30ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.    

அடுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுசேர்ந்து  போட்டியிட்டது அதிமுக. ஜானகி தேர்தலில் இருந்து ஓய்வுபெற்றதாக அறிவித்ததையடுத்து,

index

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.  இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. பிரசாரம் நடக்கும்போது, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்  கொலை செய்யப்பட்டார்.

அதன் பழி திமுகமீது விழுந்தது. அக்கட்சி 22 சதவீத வாக்குகள் பெற்று 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதிமுக, காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களைக்¢ கைப்பற்றியது.

அதிமுக 164 தொகுதிகளைப் பிடித்தது. ராஜீவ் அனுதாப அலையை மீறி பாட்டாளி மக்கள் கட்சி முதல் முறையாக  6 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்று அரசியல் சக்தியாக உருவெடுத்தது.

வளர்ப்பு மகன் திருமணம், வரலாறுகாணாத ஊழல்கள் என்று மோசமான பின்னணியுடன் 1996 தேர்தலை எதிர்கொண்டது ஜெயலலிதாவின்  அதிமுக. ஆனாலும் பிரதமர் நரசிம்மராவ் தலை மையிலான காங்கிரஸ் கட்சி அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தது. அதை ஏற்காமல் மூப்பனார் தலைமையில் பெரும் கூட்டம் காங்கிரசில் இருந்து விலகியது.

தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. ஜெயலலிதாமீதான வெறுப்பு திமுகவின் வாக்கு சதவீதத்தை 44க்கு உயர்த்தியது. 173 இடங்களில் வெற்றிகிட்டியது.

அதன் கூட்டணிக் கட்சியான தமாகா 39 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ம.க தனியாக நின்று 4 இடங்களில் வெற்றிபெற்று தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

1996ல் தொடங்கிய திமுக ஆட்சியின் 5 ஆண்டுகள் பெரிய அளவில் அதிருப்தி தரவில்லை. ஆகவே  திமுக மீண்டும் வெற்றி பெறும் என்று பலரும் கணித்திருந்த நிலையில், 2001ல் படுதோல்வி அடைந்தது அக் கட்சி.

அதன் வாக்கு வங்கி 31 சதவீதமாக இருந் தாலும் தொகுதிகளைப் பிடிக்க இயலவில்லை.  அதிமுக 31 சதவீதமே பெற்றிருந்தாலும், தமாகா, பாமக, கம்யூனிஸ்டுகள், மற்றும் காங்கிரஸ் கட்சி களை சேர்த்து வலுவான கூட்டணியை அமைத்த ஜெயலலிதா, 132 இடங்களைக் கைப்பற்றினார்.

டான்சி வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஜெய லலிதா முதல்வராக நீடிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவால் 2001 செப்டம்பரில் பதவி இழந்தார் ஜெயலலிதா. பன்னீர்செல்வத்தை   முதலமைச்சராக நியமித்துவிட்டு, உச்ச நீதிமன்றத் தில் விடுதலை பெறும்வரை காத்திருந்த ஜெயா, 2002 மார்ச் 2ல் மீண்டும் முதல்வரானார்.

2006 தேர்தல் வினோதமானது. வென்ற கட்சி யைவிட, தோற்ற கட்சி அதிக வாக்குகள் பெற்ற தேர்தல் இது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு கூட்டணி சேர்ந்து அதிமுக போட்டியிட்டது.

ஆதரவோ, எதிர்ப்போ அலையே இல் லாத தேர்தல். காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகளோடு சேர்ந்து போட்டிட்ட திமுக 27 சதவீத வாக்குகள் பெற்று 96 இடங் களைப் பிடித்தது. அதிமுக 33 சதவீத வாக்குகள் பெற்றிருந்தாலும் 61 இடங்களை மட்டுமே கைப் பற்ற முடிந்தது. 96 தொகுதிகளை வென்ற திமுக  பெரும்பான்மை இல்லாமலே ஆட்சி நடத்தியது.

2011 தேர்தல் திமுகவுக்கு பின்னடைவை அளித்த நிகழ்வு. இந்தத் தேர்தலில் திமுக ஆட்சி குறித்து அதிருப்தி நிலவியது. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளோடு திமுக கூட்டணி சேர்த்தது.

இடதுசாரிகள், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை சந்தித்தது அதிமுக. அந்தக் கூட்டணிக்கு 38 சதவீத வாக்குகளும், 150 இடங்களும்  கிடைத்தன. 22 சதவீத வாக்குகளும் 22 இடங்களும் பெற்று தேமுதிகவுக்கு பின்னால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது திமுக.

J_K_0இப்போது தமிழகம் சந்திக்கவுள்ள பேரவைத் தேர்தல் 2016ல் நடக்கவேண்டியது. முன்கூட்டியே டிசம்பரில் நடத்தப்படலாம் என்ற செய்திகள் உலவுகின்றன.

அதிமுக அரசுமீது அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு அதிருப்தி பெருகும் நிலை நிலவுகிறது.

ஆனால் அதை சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் எதிர்க்கட்சிகளிடம்   காணப்படவில்லை.

முந்தைய தேர்தல்களில் இத்தகைய அதிருப்தியை ஆதாயமாக்கி பலன டைந்த திமுக, இன்று அதே பலத்துடன் இல்லை. முன்பு அதற்கு பக்கபலமாக இருந்த பல சிறு கட்சிகள் இம்முறை அதோடு சேர்ந்து களமிறங்க ஆர்வம் காட்டவில்லை.

அதிமுக பக்கம் சாயவும் அவை தயாராக இல்லை. மாறாக மூன்றாவது அணியை உருவாக்க சீரியசாக முயற்சி செய்கின்றன. சிலருக்கு முதல மைச்சர் பதவியின் மீதான ஆசை காரணமாக அந்த முயற்சிகள் வெற்றிபெறுவது கேள்விக் குறியாக நிற்கிறது.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் திட்டமிடும் பிஜேபி தலைமை, தனது கட்சியின் தமிழக நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையே இல்லாமல் போயஸ் தோட்டத்துக்கு படையெடுக்கிறது. அத்தனை கட்சிகள் மீதும் மக்களுக்கு அதிருப்தி உண்டாகிவிட்டால் அது நமக்குதான் சாதகமாக முடியும் என்று காங்கிரஸ் கட்சியும் பொறுமை யாக காத்திருக்கிறது.

இதுவரை பார்த்த தேர்தல் முடிவுகளும் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலையும் தரும் செய்தி ஒன்றுதான்: வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது.

அவர்களுக்கே தெரியாது என்பதுதான் நிஜம். ’தேர்தல் தேதி அறிவிக்கட்டும், பார்க்கலாம்’ என்று தலைவர்கள் சொல்லும் பாணியிலேயே, ‘கூட்டணிகளை அறிவிக்கட்டும், பார்க்கலாம்’  என்று மக்களும் நினைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>