«
»
TwitterFacebookGoogle+

அம்பலமாகிவரும் போலித் தேசியவாதிகள்?

அரிநந்தன்

அன்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் கூட்டமைப்பின் தீவிர தேசியவாதி என்று வர்ணிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசுக்கு ஆதரவான பிரச்சாரங்களுக்கா வெளிநாடு சென்று திரும்பியிருப்பது பற்றிய விவகாரம். ஆட்சி மாறியதுடன் தமிழ்த் தேசிய வாதிகள் பலரது போலி முகமும் அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

மகிந்த ராஜபக்ச இருக்கின்ற வரையில் தங்களது அரச விசுவாசத்தை வெளிப்படையாக காண்பிக்க முடியாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சில தமிழ்த் தலைவர்கள், ஆட்சி மாறியவுடன் அரசாங்கத்திடம் முழுவதுமாகவே சரணாகதி அடைந்துவிட்டனர்.

இதில் இறுதியாக சேர்ந்திருப்பவர்தான் கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆவார்.

உங்களுக்கும் தெரியும் இலங்கை அரசாங்கம் பறிபோன ஜி.எஸ்.பி.பிளஸ் எனப்படும் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக கடுமையாக போராடிவந்தது.

இந்த நிலையில்தான் ஜரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுமாறு கோரியிருந்தது.

வழமைபோல் தாம் அவற்றை எல்லாம் நிறைவேற்றுவோம் என்று அரசாங்கம் வாக்குறுதியளித்தது. இது தொடர்பில் ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

இதில் அதி கூடிய வாக்குகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக விழுந்தன.

இதன் காரணமாக மீளவும் அந்த வரிச்சலுகையை வழங்குவதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடிவரும் பல புலம்பெயர் அமைப்புக்கள் இதனை வழங்கவேண்டாமென்று கூறிவந்த நிலையில் அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்தது. இதனை எதிர்கொள்ளுவதற்கு அரசாங்கம் ஒரு உக்தியை மேற்கொண்டது.

கூட்டமைப்பில் தீவிரமான தேசியவாதியாகவும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவும் தன்னை காண்பித்து வரும் சிறிதரனைக் கொண்டு, இந்த விடயங்களை கையாளும் முடிவை அரசாங்கம் எடுத்தது.

இலங்கையின் அரசாங்கத்திற்கு சிலரின் உண்மை முகம் நன்கு தெரியும்.

சிறிதரன் தனது தேர்தல் அரசியலுக்காக விடுதலைப் புலிகள் பற்றி கதைக்கின்றாரே அன்றி, அது உண்மையான விசுவாசமல்ல என்பதை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருந்தது. ஆனால் இவ்வாறானவர்களைக் கொண்டு சர்வதேச சமூகத்தை அனுகினால் அதன் மூலமாக தங்களுக்கு இரட்டிப்பு நன்மை என்பதையும் அரசாங்கம் சரியாகவே கணக்கும் போட்டது.

அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக திகழும் ஒருவரைக் கொண்டே, அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசும் போது, அது அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் இயதசுத்தியுடன் செயற்பட்டுவருகிறது என்பதை காண்பிப்பதற்கான நல்லதொரு நகர்வாகும்.

இந்த அடிப்படையிலேயே அரசாங்கம் சிறிதரனை பிரசல்ஸ்சுக்கு அழைத்துச் சென்றது. அங்கு சிறிதரனும் தனது அரசாங்க விசுவாசத்தை பொழிந்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

ஆனால் வாக்களித்த மக்கள் மிகவும் மோசமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கு இலகுவான வழியொன்று உண்டு. அதுதான் மாவீரர்கள் எங்கள் தெய்வங்கள், பிரபாகரனே எனது தலைவன் – இப்படி உணர்ச்சி ததும்ப பேசிவிட்டால் இந்த ஏமாந்த மக்களும் உடனே சிறிதரன் ஒரு உண்மையான தலைவன்தான் என்று நம்பிவிடுவர்.

ஆனால் இதன் மூலம் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சிறிதரன் மிக மோசமான அனியாயத்தை இழைத்திருக்கின்றார்.

அரசாங்கம் இவ்வாறு ஜரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சுலுகையை மீண்டும் பெறுவதற்காக ஒரு ஏமாற்று வேலையையும் செய்திருக்கிறது.

ஜரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளில் ஒன்று – பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்கு அமைவாக ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதாகும். அப்படியான ஒன்றைக் கொண்டு வந்துவிட்டதாகவே அரசாங்கமும் கூறியிருக்கின்றது.

ஆனால் தற்போது அரசாங்கம் கொண்டுவர எண்ணியுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான நகல் கசிந்திருக்கிறது.

அது தற்போது இருப்பதையும் விடவும் மிகவும் மோசமானது என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இவ்வாறானதொரு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கும் சிறிதரன் ஆதரவாக செயற்பட்டிருக்கின்றார்.

அரசாங்கத்தை ஜரோப்பிய ஒன்றியத்தில் நியாயப்படுதியிருக்கின்றார். பிரபாகரனை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நியாயப்படுத்தியிருக்கின்றார்.

இதனை விடவும் ஒரு போலித்தனம் உண்டா? இதுதானா தன்னை நம்பிய மக்களுக்கு சிறிதரன் செய்யும் கைமாறு. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கூட்டமைப்பின் தலைவர்கள் பலரும் பதவி, வாகனம், சொகுசுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் பதவியை எடுத்துக் கொண்டார்.

பின்னர் சிறிதரன், மாவை உட்பட பலரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் பதவியை எடுத்துக் கொண்டனர்.

இதன் மூலம் அரசாங்கத்துடன் மறைமகமாக இணைந்து கொண்டனர். அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து கொண்டால் தமிழ் மக்கள் தங்களை நிராகரித்துவிடுவார்கள் என்பதால்தான் வெளியில் இருப்பது போன்று காண்பித்துக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளோடும் ஒத்தோடுபவர்களாக இருக்கின்றனர்.

இப்போது சிறிதரனின் விடுதலைப் புலி முகமும் அப்பலமாகிவிட்டது. அடுத்த முறை தமிழ் மக்களை ஏமாற்ற சிறிதரன் என்ன வேசம் போடப் போகிறார்?

-அரிநந்தன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>