«
»
TwitterFacebookGoogle+

கட்டார் நெருக்கடி கூறும் கட்டியம் – பஷீர் சேகு தாவூத்

இஸ்லாமிய உலகு இரண்டு பெரிய கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.பழமையான சுன்னி – ஷீயா பிரிவினையையும் தாண்டி, இன்று உலகு தழுவிய  முஸ்லிம் “உம்மா”விற்கு  இடை நடுவில் தெளிவான ஒரு பிரி கோடு வரையப்பட்டுவிட்டது.

இக்கோடு அரசியல், இராணுவ, பொருளாதார அடிப்படையிலானது என்பதை உய்த்துணர்வதற்கு ஒருவர் துறைசார் வல்லுனராக இருக்கவேண்டியதில்லை.கட்டார் நாட்டிற்கு எதிரான சவூதி அரேபியக் கூட்டின் தீவிர எதிர் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்க முடிந்தால் உணர்திறன் கிடைத்துவிடும்.

சுன்னித் தலைவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருந்த பல முஸ்லிம் நாடுகளின் அமைவிடங்கள் பூகோள ரீதியாக இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.

இந்தக் கேந்திர முக்கியத்துவம் உள்ள இடங்கள் அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் கைவசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சதாமின் ஈராக் வீழ்த்தப்பட்டதையும், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளைகுடா நெருக்கடியையும் நோக்க வேண்டும்.

அமெரிக்காவின் மேற்குறிப்பிடும் பேராசையைப் பூர்த்தி செய்வதற்கான கருவியாகவே இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற என்ற பூதம் தோற்றுவிக்கப்பட்டது.

Page-7-anchor-1-photo-June-5-800x445“தீவிரவாதம் என்பது எந்த மதத்தினுள்ளும் இல்லை, இவ்வாறே எந்த மதமும் எவ்வகைத் தீவிரவாதத்தினுள்ளும் இல்லை”.

உலக வல்லரசுக் கனவான்களால் தமது நலனுக்காகச் செயல்படுவதற்கென்று இஸ்ரேல் உபயத்துடன் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இவை “இஸ்லாமிய அடிப்படை வாதம் “என்ற மகுடத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.இவ்வியக்கங்கள் உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றன என்று நிரூபிக்கும் முகமாக அராபிய எல்லைகளைத் தாண்டியும் தாக்குதல் நடாத்துவதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் புதிதாக கட்டார் நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இனி உலகு புதிய ஒழுங்கில் சுழலத்தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

 

இவ்விடத்தில், தொண்ணூறுகளுக்கு முன்னர் இருந்த உலக ஒழுங்கில், சோவியத் யூனியன் தலைமையில் அணிசேர்ந்திருந்த நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையில் கூட்டமைத்திருந்த நாடுகளுக்கும் இடையில் நிலவிய குளிர் யுத்த கால யுகத்தை மீள் நினைவுறுத்திப் பார்க்கவேண்டும்.

இந்நாடுகளுக்கிடையில் “வோர்சோ என்றும் நேட்டோ என்றும் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் கூட்டமைப்பையும்,கெடுபிடிகளையும் கவனம் கொள்ளுதல் இன்றைய புதிய சூழலில் அவசியமாகின்றது.

கட்டாரை மையப்படுத்தி, இன்று மேற்கொள்ளப்படுகின்ற சூழ்ச்சிகரமான இராஜதந்திர நகர்வுகள் முந்தைய பந்தியில் சொல்லப்பட்ட நேட்டோ- வோர்சோ இராணுவக் கூட்டமைப்பையும் குளிர் யுத்த காலத்தையும் நினைவுறுத்துகின்றன.

தற்பொழுது, இஸ்லாமிய நாடுகளை மையப்படுத்தி, இந்நாடுகளுக்கிடையில் இரண்டு இராணுவக் கூட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தைத்தான் கட்டார் நெருக்கடி கட்டியம் கூறி நிற்கிறது.

இந்நிலைமை இஸ்லாமிய உலகை சின்னாபின்னமாக்கி அழிப்பதையும், உலகின் ஏனைய நாடுகளில் சிறுபான்மையாக வாழுகிற முஸ்லிம்களைப் பெரும்பான்மையினரின் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சரண்டையச் செய்யும் நோக்கத்தையும் இலக்காகக் கொண்டதாகும்.

Qatar_map_6989892_ver1.0_640_360aஅமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதரவுடனும், ஆலோசனையுடனும் சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்தான்,பாக்கிஸ்தான் இன்னும் சில அரபு நாடுகள், துருக்கி ஆகியன பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு என்ற பெயரில் “முஸ்லிம் நேட்டோவாக” இயங்கத் தயாராகிவிட்டன.

இதில் துருக்கி தனது சொந்த வியூகத்தின் அடிப்படையிலான இலக்கைக் கொண்டுள்ளதை ஊகிக்க முடிகிறது.

இந்த அசைவியக்கத்திற்கு எதிராக சிரியா, ஈரான், கட்டார் ஆகிய நாடுகளும், இவற்றுடன் வருங்காலத்தில் இன்னும் சில முஸ்லிம் நாடுகளும், சில முஸ்லிம் விடுதலை இயக்கங்களும் இணைந்து ஒரு “முஸ்லிம் வோர்சோ” கூட்டமைப்பாக அமைப்பாக்கம் பெறவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இவ்வமைப்புக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உதவக் கூடும்.

இக்கட்டான இக்கட்டத்தில், இலங்கை முஸ்லிம்கள் நிலைமாறும் இப்புதிய உலக ஒழுங்கை உள்வாங்கிக் கொண்டு புதிய உபாயங்களையும், வியூகங்களையும் வகுத்துச் செயல்படத் துணிய வேண்டும்.

நாமும் சிறுபான்மையாக வாழ்வோர் என்பதையும், “எமது அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு அம்சம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை” என்பதையும் கருத்தில் எடுத்து எதிர்காலத் திட்டங்களைத் வகுத்தல் வேண்டும்.

முதலில், அனைத்து சிவில் அமைப்புக்களும் தத்தமது குறுங் கோட்பாட்டுக் கொள்கைகளையும், குழுநிலை வாதத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு “வன்முறைக்கும் தீவிரவாதத்திற்கும் எதிரான ஒற்றைக் கூட்டமைப்பாக” ஒரு குடையின் கீழ் அமைப்பாக்கம் பெறவேண்டும்.

பின்னர், சர்வதேச ரீதியில் வன்முறைக்கு எதிராகத் தீவிரமாக இயங்கி வருகிற பலமான இயக்கங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். உலகில் பெரும்பான்மை மக்கள் இனம்,மதம், மொழி கடந்து அமைதியான வாழ்வை விரும்புகிறவர்களாகும்.

இவர்கட்குள்தான் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திக் காட்டுவதற்கு முயல்கிறார்கள்.

இந்தப் பெரும்பான்மையோடு கலந்து நம்மையும் இனங்காட்டுவதன் மூலம் மட்டுமே இனிவரும் காலங்களில் நமது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும்.இத்தோடு இவ்வமைப்பில் “விடயதானம்” தெரிந்தவர்களை உள்வாங்கவும் வேண்டும்.

இந்து மாக்கடல் விவகாரங்களைப் புதிய கோணத்தில் அலசுவோம்! பயங்காட்டிப் பணியவைக்கும் தந்திரத்தைக் குலைப்போம்!

உலகின் அமைதி விரும்பும் பெரும்பான்மையோடு கலப்போம்! கவலைகளைக் களைவோம்! இவற்றிற்காக நாம் கலந்து பேசுவோம்! வாருங்கள்.

Basheer Segu Dawood

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>